Saturday, November 28, 2009

தமிழர்களுக்கு ஹிந்தி தேவையா?

சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா சட்ட சபையில் ஹிந்தியில் உறுதிமொழி எடுத்த ஒரு உறுப்பினரை மராட்டியின் பாதுகாவலர்களாக தங்களை காண்பித்து கொள்ளும் ஒரு சிலர் தாக்கினர். இடு குறித்து ஒரு தனியார் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தின் பொது, 'ஹிந்தி மொழிக்கு சிறப்பு அந்தஸ்து தேவையா?' என்ற வாதம் எழுந்தது. அதை பார்த்துகொண்டிருந்த நான், ஹிந்தி தெரியாமல் தமிழ்நாட்டிற்கு வெளியே அவதிப்படும் தமிழ் நண்பர்களின் நிலையை நினைத்து பார்த்தேன்


இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழி ஹிந்தி. ஆனால் நம் தமிழ்நாட்டில் ஹிந்தி தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தான். கல்வி நிறுவனங்களில் ஹிந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று ராஜாஜி தலைமையிலான அரசு உத்தரவிட்ட போது "இது தமிழ் தாயை கொன்று ஹிந்தியை தமிழ்நாட்டில் புகுத்தும் முயற்சி" என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 'எண்ணிக்கையில் ஹிந்தி பேசுவோர் அதிகம் உள்ளனரே' என்ற வாதத்துக்கு "அப்படி பார்த்தால் இந்தியாவின் தேசிய பறவையாக மயிலை அல்ல காக்காவை தேர்ந்து எடுக்க வேண்டும்" என்று கூறினாராம் அண்ணா. இது கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்துவராத வாதம். அப்போதைய காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பதற்கு இவர்களுக்கு ஒரு பிரச்சனை தேவை பட்டது. அதற்காக உருவாக்கபட்டது தான் இந்த ஹிந்தி எதிர்ப்பு.

ஹிந்தியை கற்றல் தமிழுக்கு செய்யும் துரோகமாக ஏன் கருதப்படவேண்டும்? தமிழ்நாட்டில் பயிலும் மாணாக்கர்கள் தமிழோடு சேர்ந்து ஹிந்தியையும் படிக்கட்டுமே. திராவிடர்களை முன்னேற்றுகிறோம் பேர்வழி என்று இவர்கள் ஹிந்தி எதிர்ப்பு செய்தார்கள் ஆனால் முன்னேறியது என்னவோ இவர்களது வங்கி கணக்கும், தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளும் தான்.

வேலை பார்பதற்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே வரும் தமிழர்கள், ஹிந்தி தெரியாமல் அவதிபடுவதை பற்றி அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை. மற்ற மாநிலத்தில் இருந்து வரும் சக பணியாளர்கள் அலுவலகத்தில் வேலை விஷயமாக ஆங்கிலத்தில் உரையாடினாலும், ஒருவருக்கொருவர் வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொள்ளும் போது ஹிந்தியை பயன்படுத்த விரும்பிகின்றனர். ஆனால் ஹிந்தி தெரியாத நாமோ ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்கின்றோம். ஹிந்தி தெரியாத ஒரு தமிழ் நண்பரை அவரது சக பணியாளர்கள் அவர் முன்னரே ஏளனம் (ஹிந்தியில்) செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்.

வேறு மாநிலத்தில் வாழும்போது வீட்டு உரிமையாளர், சவரம் செய்பவர், காய்கறி மற்றும் பால்காரர், ஆட்டோகாரர் என யாரிடத்திலும் பேசுவதற்கு ஒரு பொது மொழி தெரியாமல் தவிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி பலர் தமிழர்களை ஏமாற்றவும் நேரிடும்.

வட இந்தியர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு சரளமாகவே ஹிந்தி பேச தெரிந்தவன் நான். ஆனாலும் எனது தமிழ் பற்று எள்ளளவும் குறையவில்லை. சொல்லப்போனால் வடஇந்தியர்களிடம் திருக்குறள் குறித்தும் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றியும் பேசி இருக்கிறேன்.

களவையே கற்று மறக்க சொன்ன தமிழர்கள் இன்று தங்களுக்கு அன்றாட வாழ்கையில் பயன்படக்கூடிய ஹிந்தியை கற்க மறுப்பது ஏனோ?

ஹிந்தியை காட்டிலும் பழமையான மற்றும் இலக்கிய வளம் கொண்ட மொழி தமிழ் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் ஹிந்தியை கற்பதனால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எந்த விதத்திலும் தீமை இல்லை.

கல்விகூடங்களில் இல்லாவிடிலும் தனியார் வகுப்புகளுக்கு சென்றேனும் ஹிந்தி பேச எழுத மற்றும் படிக்க கற்றுக்கொள்ளுங்கள். தங்கள் குழந்தைகளையும் கற்க செய்யுங்கள்.

வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்!